நூறு ஆண்டுகளாக பாடப்புத்தகங்கள் தவறு: இண்டக்டிவ் இஃபெக்ட் குறித்து புதிய ஆய்வு
மூலக்கூறுகளில் எலக்ட்ரான் பரவலை விளக்கும் ‘இண்டக்டிவ் இஃபெக்ட்’ கருத்தை பாடப்புத்தகங்கள் கிட்டத்தட்ட 100 ஆண்டுகளாக தவறாக விளக்கி வந்துள்ளன என்று பன்னாட்டு ஆய்வு ஒன்று கண்டறிந்துள்ளது. நடுநிலை மூலக்கூறில் இந்த விளைவு ஒரே பிணைப்புக்கு அப்பால் நீட்டிக்காது…
மாணவர் தலைமுறைகள் பலரும் கற்றுக்கொண்ட ஒரு ரசாயனவியல் கருத்தை, கடந்த 100 ஆண்டுகளாக பாடப்புத்தகங்கள் தவறாக விளக்கி வந்துள்ளன என்று ஒரு பன்னாட்டு ஆய்வாளர் குழு தெரிவிக்கிறது. மூலக்கூறுகளுக்குள் அணுக்கள் எலக்ட்ரான்களின் பரவலை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை விளக்கும் அடிப்படைக் கருத்துதான் ‘இண்டக்டிவ் இஃபெக்ட்’. இது குறித்த அவர்களது 2024ஆம் ஆண்டு ஆய்வில், வழக்கமான பாடப்புத்தக விளக்கம் நவீன சான்றுகளுடன் பொருந்தவில்லை என்று கண்டறியப்பட்டது. இந்தக் கண்டுபிடிப்புகளை விரிவுபடுத்தும் புதிய கட்டுரை ஒன்று ‘ஜர்னல் ஆஃப் கெமிக்கல் எஜுகேஷன்’ இதழில் வெளியாகியுள்ளது.
இங்கிலாந்தின் கார்டிஃப் பல்கலைக்கழகம் மற்றும் ஆஸ்திரேலியாவின் நியூகாசில் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் இக்குழுவுக்குத் தலைமை தாங்குகின்றனர். இண்டக்டிவ் இஃபெக்ட், பாடப்புத்தகங்கள் கூறுவதை விட மிகக் குறுகிய எல்லையில் மட்டுமே செயல்படுகிறது என்று இக்குழு கூறுகிறது. பல தசாப்தங்களாக, சில அணுக்களின் தாக்கம் மூலக்கூறுக்குள் மூன்று அல்லது நான்கு பிணைப்புகள் வரை பயணித்து, தூரம் அதிகரிக்கும்போது படிப்படியாக பலவீனமடையும் என்று பாடப்புத்தகங்கள் கற்பித்து வந்தன. ஆனால் புதிய ஆய்வின்படி, நடுநிலை மூலக்கூறு ஒன்றில் இந்த விளைவு ஒரே ஒரு பிணைப்புக்கு அப்பால் நீட்டிக்காது. “குறிப்பிட்ட வகை வினைத்திறன்களை விளக்குவதற்கான முறைகளை நாம் மறுசீரமைக்க வேண்டும்” என்று ஆய்வுக் குழுவின் முதன்மை ஆசிரியரும், கார்டிஃப் பல்கலைக்கழக ரசாயனவியல் பள்ளியைச் சேர்ந்தவருமான டாக்டர் மார்க் எலியட் தெரிவித்தார்.
மருந்துகள், மேம்பட்ட பொருட்கள், வேளாண் இரசாயனங்கள் மற்றும் பாலிமர்களை உருவாக்கும் அணுச் சங்கிலிகளின் கட்டமைப்பையும் வினைத்திறனையும் விளக்க ஆர்கானிக் ரசாயன வல்லுநர்கள் இண்டக்டிவ் இஃபெக்டை நம்பியிருக்கின்றனர். இதனால் இந்தக் கண்டுபிடிப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இங்கிலாந்தின் பள்ளி இறுதி நிலைத் தேர்வான ஜிசிஎஸ்இ-க்குப் பிறகு ரசாயனவியல் படிக்கும் அனைவரும் இந்தக் கருத்தை கற்கிறார்கள் என்று எலியட் கூறினார். இதன் தாக்கமாக, இரண்டு ஏ-லெவல் தேர்வு வாரியங்கள், இந்த ஆய்வை காரணம் காட்டி, இண்டக்டிவ் இஃபெக்டை தாங்கள் கற்பிக்கும் முறையை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளன.
இந்த முடிவு ஒரே ஒரு பரிசோதனையிலிருந்து வரவில்லை. அறிவியல் இலக்கியங்களில் ஏற்கெனவே சிதறிக்கிடந்த சான்றுகளையும், தங்களது சொந்த ஒருங்கிணைந்த தரவுத் தொகுப்பையும் இணைத்து குழு இந்த முடிவை எட்டியது. நியூகாசில் பல்கலைக்கழகத்தின் டாக்டர் எட்வின் ஜான்சன் மற்றும் நியூ இங்கிலாந்து பல்கலைக்கழகத்தின் டாக்டர் கசிமிர் கிரிகரி ஆகியோரின் ஆய்வுகளை எலியட் அறிந்த பிறகு இந்தப் பன்னாட்டுக் கூட்டு முயற்சி வளர்ந்தது. எலக்ட்ரோநெகட்டிவ் தன்மை கொண்ட தனிமங்கள் (எலக்ட்ரான்களைத் தம் பக்கம் இழுக்கும் தன்மை கொண்டவை) அமிலத்தன்மையை எவ்வாறு பாதிக்கின்றன என்பதை அவர்கள் ஆராய்ந்தனர். அந்த ஆய்வுகளும் வழக்கமான பாடப்புத்தக விளக்கங்களுடன் பொருந்தாத முடிவுகளையே அளித்தன.
முந்தைய தலைமுறை ரசாயன வல்லுநர்கள் வரையறுக்கப்பட்ட பரிசோதனைத் தரவுகளிலிருந்து மறைமுகமான முடிவுகளை எடுக்க வேண்டியிருந்தது என்று ஆய்வாளர்கள் தெரிவித்தனர். ஆனால் இன்று நவீன கணிப்பு முறைகள் மூலக்கூறு அமைப்புகளையும் எலக்ட்ரான் பரவலையும் நேரடியாக ஆராய அவர்களுக்கு உதவுகின்றன.
சொல் விளக்கம்
இதுவரை நடந்தது
- காற்றில் வைத்தவுடன் காந்தமாக மாறும் புதிய நானோப்பொருள்
- புதிய திண்ம ராக்கெட் எரிபொருள் சேர்மத்திற்கு DRDO, ஹைதராபாத் பல்கலைக்கழகத்திற்குக் காப்புரிமை
- முயன்று பார்க்காமல் கணக்கீட்டால் ஒளிரும் மூலக்கூறுகளை உருவாக்கும் விஞ்ஞானிகள்
- மீத்தேன் மாற்றத்தை இயக்கும் மறைந்திருந்த அணு அமைப்பை சீன வேதியியலாளர்கள் கண்டறிப்பு
- பிளாஸ்டிக் கழிவை எரிபொருளாக்கும் புதிய முறை: சூடேற்றப்பட்ட உப்புகள்
- மிக உறுதியான ஒரு பிளாஸ்டிக்கை முதன்முறையாகக் கரைத்த விஞ்ஞானிகள்
- நூறு ஆண்டுகளாக பாடப்புத்தகங்கள் தவறு: இண்டக்டிவ் இஃபெக்ட் குறித்து புதிய ஆய்வு
