Claude உருவாக்கும் உரையில் மறைமுக நீரடையாளம்: ஐரோப்பிய விதிக்கு Anthropic இணக்கம்
ஐரோப்பிய ஒன்றியத்தின் AI சட்டத்தின் வெளிப்படைத்தன்மை நெறிமுறைக்கு இணங்க, தமது Claude சாட்பாட் உருவாக்கும் உரையில் மறைமுகமான 'நீரடையாளத்தை' புகுத்தும் திட்டத்தை Anthropic விளக்கியிருக்கிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் செயற்கை நுண்ணறிவுச் சட்டம் விதிக்கும் 'வெளிப்படைத்தன்மை நெறிமுறைக்கு' இணங்க, தமது Claude சாட்பாட் உருவாக்கும் உரையில் ஒரு மறைமுக நீரடையாளத்தை (watermark) புகுத்தும் திட்டத்தை Anthropic ஒரு வலைப்பதிவில் விளக்கியிருக்கிறது. AI உருவாக்கிய உரையை அடையாளம் காண வழி வேண்டும் என்று அந்தச் சட்டம் கூறுகிறது. Google DeepMind நிறுவனம் 2024-ல் வெளியிட்ட 'SynthID Text' முறையையே தாம் பயன்படுத்துவதாக Anthropic கூறுகிறது; அடையாளம் காண உதவும் ஒரு API-யும் விரைவில் வெளியிடப்படும் என்கிறது.
எப்படி வேலை செய்கிறது? Claude சிறு தேர்வுகள் செய்யும்போது — உதாரணமாக 'overcast' என்ற வார்த்தையா 'grey' என்ற வார்த்தையா என்று தீர்மானிக்கும்போது — ஒரு குறிப்பிட்ட வடிவத்தில் தேர்வுகளை செய்யும்படி அமைப்பு தூண்டுகிறது. வாசகருக்கு அது தெரியாது; ஆனால் அந்த வடிவத்தை அறியும் திறவுகோலை (key) கொண்டவருக்கு அந்த அடையாளம் தெரிந்துவிடும். இதனால் Claude உரையின் தரம் குறையாது; வாசகருக்கு நீரடையாளம் உள்ள பதிலும் இல்லாத பதிலும் ஒரே மாதிரியாகவே தோன்றும் என்று நிறுவனம் தெரிவிக்கிறது.
பயனாளர் திருத்தினால் இந்த அடையாளத்தை மறைக்க முடியுமா? சிறு திருத்தங்கள் அதனை முற்றிலும் அகற்றாது; ஆனால் ஒவ்வொரு வார்த்தையையும் மாற்றி முழுவதுமாக மறு எழுத்து செய்தால் அடையாளம் அழிந்துவிடும் என்கிறது Anthropic. அப்படி முழுவதுமாக மாற்றியப் பிறகு 'அந்த உரையை இன்னும் AI உருவாக்கியது என்றே சொல்ல முடியுமா என்பதே கேள்விக்குரியது' என நிறுவனம் கூறுகிறது.
Claude ஒரு உரையை மேற்பார்வை மட்டுமே செய்திருந்தால் என்ன ஆகும்? உரையின் நீளத்தையும் Claude எவ்வளவு தூரம் திருத்தியிருக்கிறது என்பதையும் பொறுத்தே அடையாளம் தென்படும் என்கிறது நிறுவனம். சிறு திருத்தமாக இருந்தால், பெரும்பாலான வார்த்தைகள் மனிதர் எழுதியதாக இருக்கும்; அடையாளம் ஒட்டிக்கொள்ள போதிய இடம் இருக்காது. நிரல் குறியீட்டில் (code) அடையாளம் மிகக் குறைவே இருக்கும் — சரியாக இயங்கும் நிரலை உருவாக்குகையில் மாற்று வார்த்தைகளுக்கு இடமில்லை. கருத்துரைகளில் (comments) மட்டும் அடையாளம் தென்படலாம் என்கிறது Anthropic.
Claude ஒன்று மட்டுமே இப்படி நீரடையாளம் புகுத்தப் போவதில்லை; அதே ஐரோப்பிய நடைமுறை நெறிமுறையில் கையெழுத்திட்டுள்ள பிற முக்கிய மாடல் நிறுவனங்களும் தமது தனிப்பட்ட நீரடையாள முறையை அறிமுகப்படுத்தும் என்று Anthropic கூறுகிறது. 'இது AI-யால் எழுதப்பட்டதில்லை, அது AI-யால் எழுதப்பட்டது' போன்ற எழுத்து பாணிகளைப் பார்த்து அடையாளம் காணும் Pangram போன்ற கருவிகளில் இருந்து இந்த நீரடையாள முறை அடிப்படையிலேயே வேறுபட்டது என்றும் நிறுவனம் சுட்டிக்காட்டியிருக்கிறது.
