பிரேசில் அட்லாண்டிக் காட்டு மண்ணை மாற்றும் பெரிய பாலூட்டிகள்
டேப்பிர், பெக்கரி பன்றி, மான், அகவுட்டி போன்ற பெரிய பாலூட்டிகள் அட்லாண்டிக் காட்டு மண்ணின் இரசாயனத் தன்மையை மாற்றுகின்றன. இவை மண்ணின் அமிலத்தன்மையைக் குறைத்து வளத்தை அதிகரிக்கின்றன என நீண்டகால பிரேசிலிய ஆய்வு கண்டறிந்துள்ளது.
டேப்பிர், பெக்கரி காட்டுப்பன்றி, அகவுட்டி, மான் போன்ற பெரிய பாலூட்டிகள், பிரேசிலின் அட்லாண்டிக் காட்டில் இலைக்குப்பை, மண் ஆகியவற்றின் இரசாயனக் கூறுகளை மாற்றுகின்றன. இதனால் ஊட்டச்சத்துக்களின் கிடைப்புத்தன்மையும், மண்ணின் வளமும் அதிகரிக்கின்றன. இதை ஓர் அறிவியல் இதழில் வெளியான புதிய ஆய்வு கண்டறிந்துள்ளது. சாவோ பாலோ மாநிலப் பல்கலைக்கழகத்தின் உயிரியல் நிறுவனத்தில் உள்ள CBioClima ஆராய்ச்சி மையத்தைச் சேர்ந்தவர்கள் இந்த ஆய்வை நடத்தினர்.
"அட்லாண்டிக் காட்டின் தொடர்ச்சியான பகுதிகளில் உள்ள பாலூட்டி உயிர்த்திணிவில் பெரும்பகுதி பெக்கரிகளே. இவை 100-க்கும் மேற்பட்ட மந்தைகளாக வாழும் காட்டுப்பன்றி இனம்" என்று இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியர் லெடிசியா கோன்சால்வேஸ் ரிபேரோ கூறினார். "அவை ஒரு பகுதிக்கு வந்து, விழுந்த பழங்கள், விதைகளைத் தேடி மண்ணைக் கிளறிக் கால்களால் மிதிக்கின்றன. மலம், சிறுநீர் கழிக்கின்றன" என்றார் அவர். இது ஊட்டச்சத்துச் சுழற்சியையும் இலைக்குப்பையின் பன்முகத்தன்மையையும் பாதிக்கிறது என்று அவர் தெரிவித்தார்.
2009ஆம் ஆண்டு முதல், விலங்குகள் சுதந்திரமாக உலவும் 15 சதுர மீட்டர் காட்டுத் தொகுதிகளையும், வேலி போட்டு விலங்குகளை விலக்கிய தொகுதிகளையும் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பிட்டு வருகின்றனர். கேமரா ட்ராப் படங்களைக் கொண்டு பாலூட்டி உயிர்த்திணிவை மதிப்பிட்டனர். கார்லோஸ் போட்டெல்ஹோ மாநிலப் பூங்காவில் உள்ள 10 திறந்த, 10 மூடிய தொகுதிகளை தற்போதைய ஆய்வு பகுப்பாய்வு செய்தது. விலங்குகள் இருந்த தொகுதிகளில் மண் குறைவான அமிலத்தன்மை கொண்டிருந்தது. அதிக அளவில் தாவரங்களுக்குத் தீங்கு விளைவிக்கும் அலுமினியம், விலங்குகள் இருந்த இடங்களில் குறைவாக இருந்தது. இலைக்குப்பையில் லிக்னின் என்ற சிதைவடையாத மூலக்கூறும் குறைவாக இருந்தது. ஏனெனில் விலங்குகள் மிதிப்பதால் குப்பை சிறு துண்டுகளாகச் சிதறி, மண்ணுடன் அதிகம் தொடர்பு கொள்கிறது.
"பெரிய தாவர உண்ணிகள் காடுகளில் எவ்வளவு முக்கியப் பங்கு வகிக்கின்றன என்பதை எங்கள் ஆய்வு உறுதியாக நிரூபித்துள்ளது" என்று இந்த ஆய்வை நடத்திய IB-UNESP பேராசிரியர் மவுரோ கலெட்டி கூறினார். "வேட்டையாடப்படும் இதே விலங்குகள்தான், சூழலின் பொறியாளர்களாகச் செயல்பட்டு, நிலப்பரப்பின் தாவர அமைப்பு முதல் மண்ணின் இரசாயனம் வரை அனைத்தையும் பாதிக்கின்றன" என்றார். ஆய்வின் புதிய கட்டத்தில், பெரிய பாலூட்டிகள் உள்ள தொகுதிகளில் வேட்டையாடி நெமட்டோடுகள் — மண்ணில் வாழும் நுண்ணிய புழு உயிரினங்கள் — அதிகமாக இருப்பதை ரிபேரோ கண்டறிந்து வருகிறார். இவற்றின் இருப்பு ஆரோக்கியமான சூழலைக் குறிக்கிறது.
சொல் விளக்கம்
இதுவரை நடந்தது
- பிரேசிலில் 20 மீட்டர் நீள புதிய டைனோசர் இனம் கண்டுபிடிப்பு
- பிரேசில் அட்லாண்டிக் காட்டு மண்ணை மாற்றும் பெரிய பாலூட்டிகள்
