ஹவாயில் திடீர், கடுமையான மழைப் புயல்கள் ஏன் தீவிரமடைகின்றன?
ஹவாயில் நீண்டகால மழை மொத்தத்தில் குறைந்தாலும், திடீர் வெள்ளத்தை ஏற்படுத்தும் குறுகிய, கடுமையான மழைப் புயல்கள் தீவிரமடைந்து வருவதாக 50 ஆண்டு ஆய்வு கண்டறிந்துள்ளது.
ஹவாய் தீவுகளில் நீண்டகால மழைப்பொழிவு மொத்தத்தில் குறைந்து வருகிறது. ஆனால் திடீரெனப் பெய்யும் கடுமையான மழைகளால் திடீர் வெள்ளங்கள் ஏற்படுகின்றன. ஓடைகளும் வடிகால்களும் தாங்க முடியாத அளவு மழை பெய்யும்போது இத்தகைய ஆபத்தான வெள்ளம் உண்டாகிறது. இது தீவிரமடைந்து வருவதாக ஹவாய் பல்கலைக்கழகம் (மானோவா வளாகம்) ஆய்வாளர்களின் புதிய ஆய்வு தெரிவிக்கிறது. இந்த ஆய்வு இன்டர்நேஷனல் ஜர்னல் ஆஃப் க்ளைமட்டாலஜி இதழில் வெளியானது.
CTAHR (வெப்பமண்டல வேளாண்மை மற்றும் மனித தகவமைப்புத் திறன் கல்லூரி) நடத்திய இந்த ஆய்வு, மாநிலம் முழுவதும் மணிநேர கடுமையான மழைப் போக்குகளை ஆய்வு செய்யும் முதல் விரிவான ஆய்வாகும். இது 1966 முதல் 2020 வரையிலான 50 ஆண்டு தரவுகளை உள்ளடக்கியது. கௌவாய், ஓவாஹு, மொலோகாய், மௌய், ஹவாய் தீவு ஆகிய ஐந்து தீவுகளிலுள்ள 117 மழைமானி நிலையங்களின் மணிநேரத் தரவை ஆய்வுக் குழு பரிசோதித்தது. இது வழக்கமான 24 மணிநேர சராசரிகளில் தெரியாத போக்குகளை வெளிக்கொணர்ந்தது. CTAHR கல்லூரியின் பேராசிரியரும் இந்த ஆய்வின் தலைமை ஆய்வாளருமான யின்பான் ட்சாங் பின்வருமாறு தெரிவித்தார். 'புயல், வெள்ளம் போன்ற தீவிர வானிலையைப் புரிந்துகொள்ள வேண்டுமெனில், தினசரி அல்லது மாதாந்திர சராசரிகளை விட குறுகிய கால, அதிக நேர-துல்லிய தரவைத்தான் நாம் பார்க்க வேண்டும்.'
இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஏற்படும் வழக்கமான கனமழைகள் மாநிலம் முழுவதும் பொதுவாக குறைந்த தீவிரம் அடைந்து வருகின்றன என ஆய்வு கண்டறிந்துள்ளது. ஆனால் ஒன்று முதல் மூன்று மணிநேரம் வரை நீடிக்கும் திடீர், குறுகிய கால மழைகள் — வழக்கமாக 20 முதல் 100 ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே ஏற்படும் கடுமையான புயல்கள் — கணிசமாக தீவிரமடைந்து வருகின்றன. ஆறு மணிநேரம் அல்லது அதற்கு மேல் நீடிக்கும் மழைகள், ஒன்று முதல் மூன்று மணிநேர மழைகளை விட மிகவும் குறிப்பிடத்தக்க அளவில் பலவீனமடைந்து வருகின்றன. ஹவாயின் மலைகள் மற்றும் தீவு நிலப்பரப்பு காரணமாக, ஒரு பகுதியில் மழையின் தீவிரம் அதிகரிக்கும்போது, அதற்கு சில கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் அது குறையலாம்.
ஹவாய் தீவுகள் தீவிர மணிநேர மழைக்கு அதிகம் பாதிக்கப்படக்கூடிய இரு காலகட்டங்களை ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்: அக்டோபர்-டிசம்பர் மற்றும் பிப்ரவரி-மார்ச். இந்த கனமழைகள் பொதுவாக குளிர் காற்றுமுனைகள், கோனா புயல்கள் மற்றும் பிற குளிர்கால வானிலை அமைப்புகளால் ஏற்படுகின்றன. கோனா புயல்கள் என்பவை, வழக்கத்திற்கு மாறான திசையிலிருந்து குளிர்கால மழையைக் கொண்டுவரும் தாழ்வழுத்தத் தொகுப்புகள். மழைக்காலத்தின் இறுதியில் நிகழும் பிப்ரவரி-மார்ச் தீவிர மழை நிகழ்வுகள் எதிர்பாராதவை, மக்களை திடுக்கிடச் செய்யக்கூடியவை. கோடைக்காலத்தில் புயல்களும் தீவிர மழையைக் கொண்டுவரலாம்.
இந்த கண்டுபிடிப்புகள் அவசரகால பணியாளர்கள், மாவட்ட திட்டமிடுநர்கள், உள்கட்டமைப்பு வடிவமைப்பாளர்களுக்கு புதுப்பிக்கப்பட்ட தகவல்களை வழங்குகின்றன. இந்த ஆய்வு ஹவாய் பல்கலைக்கழகம் - மானோவா வளாகத்தில் CTAHR, கடல்-புவி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் பள்ளி, சமூக அறிவியல் கல்லூரி, நீர்வள ஆராய்ச்சி மையம் ஆகியவற்றை உள்ளடக்கிய கூட்டு முயற்சியாகும். இதை முதன்மையாக மேக்சிம் கேயட் தொகுத்தார்; ட்சாங் மற்றும் ஹவாய் மாநில வானிலையியலாளர் பாவ்-ஷின் சூ ஆகியோர் இணை ஆசிரியர்களாக இருந்தனர்.
சொல் விளக்கம்
இதுவரை நடந்தது
- காட்டுத் தீப் புகையும் மழையும் சேரும்போது சூழலுக்கு ஊட்டச்சத்து கிடைக்குமா?
- காலநிலை மாற்றத்தால் 560 மில்லியன் குழந்தைகள் கூடுதல் வெப்ப அபாயத்தில்: ஆய்வு
- மேற்கு அமெரிக்க நீர் நெருக்கடியை மோசமாக்கும் பெரும் மாசுபடுத்திகள்
- நேபாள வெள்ளப் பேரழிவுக்குக் காரணம் பனிப்பாறை இடிவு, நிலநடுக்கமல்ல
- எல் நினோ: 40 ஆண்டுகளில் 40% வலிமை அதிகரிப்பு, ஆய்வு
- தொடர்ச்சியான புயல்கள்: ஆர்க்டிக் கடல் பனி வேகமாக மறைகிறது
- ஹவாயில் திடீர், கடுமையான மழைப் புயல்கள் ஏன் தீவிரமடைகின்றன?
