4,00,000 ஆண்டுகள் பழமையான ஹோமோ எரக்டஸ் பற்கள் டெனிசோவான் மரபணு தொடர்பை வெளிப்படுத்துகின்றன
ஆறு ஹோமோ எரக்டஸ் பற்களிலிருந்து குறைந்த சேதம் விளைவிக்கும் நுட்பம் மூலம் பற்பூச்சு புரதங்களை பிரித்தெடுத்தனர் சீன ஆய்வாளர்கள். இதன்படி, அச்சிற்றினத்தை டெனிசோவான்களுடனும், சாத்தியமாக நவீன மனிதர்களுடனும் இணைக்கும் இரு பிறழ்வுகளைக் கண்டறிந்தனர்.
சீன அறிவியல் அகாடமியின் முதுகெலும்பு தொல்லுயிரியல் மற்றும் தொல் மானுடவியல் நிறுவனத்தின் (IVPP) ஆய்வாளர்கள், ஒரு மரபணுத் தொடர்பைச் சுட்டிக்காட்டும் மூலக்கூறு ஆதாரத்தை மீட்டெடுத்துள்ளனர். இது ஹோமோ எரக்டஸுக்கும் டெனிசோவான்களுக்கும் இடையேயானது. டெனிசோவான்கள் என்பது நவீன மக்கள்தொகைக்கும் மரபணுப் பொருளை அளித்த ஒரு பழங்கால மனித இனம். ஆப்பிரிக்காவிலிருந்து வெளியேறியதாக அறியப்பட்ட ஹோமோ இனத்தின் முதல் இனமே ஹோமோ எரக்டஸ் ஆகும். எனினும் மூலக்கூறு ஆதாரம் குறைவாக இருந்ததால், அதன் மரபணுப் பண்புகளும் நவீன மனிதர்களுடனான உறவும் இதுவரை தெளிவாகவில்லை.
IVPP-ஐச் சேர்ந்த சியாவோமெய் ஃபூ இக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். ஒரு நுண்ணிய அரிப்பு நுட்பத்தைப் பயன்படுத்தி, சீனாவின் மூன்று தளங்களான ஜோவ்கௌடியன், ஹெக்சியன், சுன்ஜியாடொங் ஆகிய இடங்களில் கிடைத்த ஆறு ஹோமோ எரக்டஸ் பற்களிலிருந்து பற்பூச்சு புரதங்களை குழு மீட்டெடுத்தது. இப்பற்கள் அனைத்தும் குறைந்தது 4,00,000 ஆண்டுகள் பழமையானவை. பற்களின் மொத்த வடிவத்தைச் சேதப்படுத்தாமலேயே இந்த நுட்பம் செயல்பட்டது. இக்கண்டுபிடிப்புகள் நேச்சர் இதழில் வெளியிடப்பட்டன.
AMBN எனும் பற்பூச்சு புரதத்தில் இரண்டு பிறழ்வுகளை ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இதில் AMBN-A253G என்பது இதற்கு முன் அறியப்படாதது; மூன்று தளங்களிலும் கிடைத்த மாதிரிகள் ஒரே மக்கள்தொகையைச் சேர்ந்தவை என்பதைக் காட்டும் குறியீடாக இது முன்மொழியப்படுகிறது. இரண்டாவது பிறழ்வான AMBN-M273V முன்பு டெனிசோவான்களுக்கு மட்டுமே உரியதாகக் கருதப்பட்டது. இதை இப்போது ஹோமோ எரக்டஸ் மக்கள்தொகையிலும் காண்கின்றனர். இது கலப்புறவின் மூலம் டெனிசோவான் வழித்தோன்றலுக்குள் நுழைந்திருக்கக்கூடும் என உணர்த்துகிறது. பின்னர் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஓசியானியாவின் சில நவீன மக்கள்தொகைகளை டெனிசோவான் மரபணு கலப்பு மூலம் இது சென்றடைந்திருக்கக்கூடும்.
பழம்பொருட்களைச் சேதப்படுத்தாமல் ஆய்வு செய்யும் புதிய நுட்பங்களையும் இப்பணி அறிமுகப்படுத்துகிறது. இதில், ஆண்பாலுக்கே உரிய AMELY எனும் பற்பூச்சு புரதத்தைப் பயன்படுத்தி பழங்கால மனிதர்களின் பாலினத்தை நிர்ணயிக்கும் நுட்பமும் அடங்கும். இவ்வாய்வுக்கு சீன தேசிய இயற்கை அறிவியல் அறக்கட்டளை, சீன அறிவியல் அகாடமி, சீன தொல்லியல் திறமை மேம்பாட்டுத் திட்டம் மற்றும் நியூ கார்னர்ஸ்டோன் அறிவியல் அறக்கட்டளை ஆகியவை நிதியுதவி அளித்தன.
சொல் விளக்கம்
இதுவரை நடந்தது
- பூமிக்கும் நிலவுக்கும் இடையே 3டி செயற்கைக்கோள் வலையம்: சீனாவின் புதிய திட்டம்
- பெய்ஜிங் உலக ரோபோ விளையாட்டுகளில் ஓட்டம், தாண்டுதலில் சாதனை படைத்த ஹியூமனாய்டு ரோபோக்கள்
- கடல் நீரிலிருந்து அமெரிக்க இலக்கை விட 8 மடங்கு வேகமாக யுரேனியம் எடுத்த சீன விஞ்ஞானிகள்
- மாசுபட்ட காற்றில் மட்டுமே வெளிப்படும் குழந்தையின் மரபணு நுரையீரல் நோய் ஆபத்து: ஆய்வு
- வோர்ல்பூல் விண்மீன் திரள் அருகே விண்மீன்களற்ற இரு ஹைட்ரஜன் மேகங்கள் கண்டுபிடிப்பு.
- ஆரிஜின் வூகாங் குவாண்டம் கணினியில் 98% திறனுடன் குவாண்டம் ரூட்டரைச் சோதித்த சீனக் குழு.
- 4,00,000 ஆண்டுகள் பழமையான ஹோமோ எரக்டஸ் பற்கள் டெனிசோவான் மரபணு தொடர்பை வெளிப்படுத்துகின்றன
