நுண்ணுயிர் சமூகங்களுக்கு வைட்டமின் B12 ஐ கிடைக்கச் செய்கின்றன பேஜ்கள்
விர்ஜீனியா டெக்கில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் பாக்டீரியாவிலிருந்து வைட்டமின் B12 ஐ வெளியிட பாக்டீரியோபேஜ்கள் உதவுவதை கண்டறிந்துள்ளனர்.

பாக்டீரியாவைத் தாக்கும் வைரஸ்களான பாக்டீரியோபேஜ்கள், பாக்டீரியா செல்களுக்குள் சிக்கியுள்ள வைட்டமின் B12 ஐ வெளியேற்றும் புதிய வழிமுறையை விர்ஜீனியா டெக் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். B12 ஐத் தாமாகத் தயாரிக்க முடியாத அண்டை நுண்ணுயிரிகளுக்கு, இந்த அத்தியாவசிய ஊட்டச்சத்து இதன் மூலம் கிடைக்கிறது. இதனால் நுண்ணுயிர் சமூகங்களின் அமைப்பே மாறுகிறது.
கோபாலமின் என்றும் அழைக்கப்படும் வைட்டமின் B12, டிஎன்ஏ உற்பத்தி, சிவப்பு இரத்த அணுக்கள் உருவாக்கம் மற்றும் நரம்பு செயல்பாட்டிற்கு மிகவும் அவசியமானது. எனினும், இது சில பாக்டீரியா மற்றும் ஆர்க்கியாக்களால் மட்டுமே தயாரிக்கப்படுகிறது. ISME ஜர்னலில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வு, பேஜ்கள் செல்களை உடைத்து B12 ஐ வெளியிடுவதைக் காட்டுகிறது, இதனை பிற நுண்ணுயிரிகள் பயன்படுத்த முடிகிறது.
இதை நிரூபிக்க, ஆராய்ச்சியாளர்கள் ஒரு கட்டுப்படுத்தப்பட்ட சோதனை அமைப்பை உருவாக்கினர். அதில் B12 தயாரிக்கும் ஒரு பாக்டீரியாவும், B12 தேவைப்பட்டும் அதைத் தயாரிக்க முடியாத மற்றொரு பாக்டீரியாவும் இருந்தன. பேஜ், B12 தயாரிக்கும் செல்களைத் தாக்கி அழித்தபோது, அந்த வைட்டமின் சுற்றுச்சூழலில் வெளியேறியது. அதை நம்பியிருந்த மற்ற பாக்டீரியா நன்றாக வளரத் தொடங்கியது.
நுண்ணுயிர்கள் வளர B12 இருப்பது அவசியம் என்பதை மேலும் பல பரிசோதனைகள் உறுதி செய்தன. பேஜ்கள் B12 தயாரிக்கும் பாக்டீரியாவை உடைத்தபோது, பாக்டீரிய சமூகங்களின் பல்வகைமை அதிகரித்தது. அதாவது, B12 போன்ற மதிப்புமிக்க மூலக்கூறுகளை வெளியேற்றி, ஊட்டச்சத்து மறுசுழற்சியிலும் பேஜ்கள் பங்கு வகிக்கின்றன.
பேஜ்கள் வெறும் பாக்டீரியாக் கொல்லிகள் மட்டுமல்ல; சூழலியலில் அவற்றுக்கு இன்னொரு முக்கியப் பங்கும் உண்டு என்பதை இந்தக் கண்டுபிடிப்பு காட்டுகிறது. ஊட்டச்சத்துக்களை வெளியேற்றுவதன் மூலம், மனித குடல், மண், கடல் என பல்வேறு சூழல்களில் உள்ள நுண்ணுயிர் சூழல் அமைப்புகளை பேஜ்கள் மாற்றியமைக்கின்றன.
