கோடையை தாண்டி பரவும் கடும் வெப்பம்: புதிய உலகளாவிய ஆய்வு
உலக நிலப்பரப்பில் பாதிக்கும் மேற்பட்ட பகுதிகளில், கடும் வெப்பம் இனி வழக்கமான கோடைக்காலத்தில் மட்டும் நின்றுவிடாமல் வசந்தம் அல்லது இலையுதிர் காலத்தை நோக்கி பரவி வருவதாக ஒரு புதிய உலகளாவிய ஆய்வு கூறுகிறது. ஆனால் இந்த மாற்றம் எல்லா பகுதிகளிலும் ஒரே திசையில்…
கடும் வெப்பம் காலநிலை தரும் மிகவும் ஆபத்தான அபாயங்களில் ஒன்று. இது எப்போது ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே அதன் தீவிரமும் மாறுகிறது. வசந்த காலத்தில் ஏற்படும் வெப்ப அலை மக்களை எதிர்பாராமல் தாக்குகிறது, ஏனெனில் உடல் இன்னும் பழகியிருக்காது, குளிரூட்டும் வசதிகளும் தயாராக இருக்காது. இலையுதிர் காலத்தில் ஏற்படும் வெப்ப அலையோ, கோடையின் நீண்ட வெப்ப அழுத்தத்தால் ஏற்கெனவே சோர்வடைந்த உடல்களுக்கும் உள்கட்டமைப்புக்கும் கூடுதல் சுமையாக அமைகிறது. ஏஜியு அட்வான்சஸ் இதழில் வெளியான ஒரு ஆய்வு — இவானோவிச் தலைமையிலான ஆய்வாளர் குழு மேற்கொண்டது — உலகளவில் கடும் வெப்பம் ஏற்படும் காலம் மாறுகிறதா என்பதை முதன்முறையாக அளந்துள்ளது.
நிலையான காலண்டர் பருவங்களுக்குப் பதிலாக, இந்த ஆய்வு ஒவ்வொரு இடத்திற்கும் "உள்ளூர் வெப்பப் பருவத்தை" 1980களில் கடும் வெப்பம் அதிகமாக ஏற்பட்ட தொடர்ச்சியான மூன்று மாதங்களாக வரையறுக்கிறது. அதற்கு முன்னும் பின்னும் உள்ள இரண்டு மாத காலங்களை "பருவகால விளிம்புகள்" என அழைக்கிறது. MERRA2 தரவுத்தொகுப்பைப் பயன்படுத்தி, ERA5 உடன் சரிபார்த்து, 1980களையும் 2015-2024ஐயும் ஒப்பிட்டு, இந்த பங்குகள் கடந்த 45 ஆண்டுகளில் எவ்வாறு மாறின என்பதை ஆய்வாளர்கள் அளந்தனர். தாவரங்கள் மற்றும் சூழலியலுக்குக் கேடு விளைவிக்கும் உலர் வெப்பநிலையையும், மனிதர்களுக்கு அதிக சிரமம் தரும் ஈரப்பத வெப்பத்தையும் அவர்கள் ஆய்ந்தனர். வெப்பம், ஈரப்பதம், காற்றின் வேகம், சூரிய கதிர் ஆகியவற்றை இணைத்து அளக்கும் இந்த ஈரப்பத வெப்ப அளவீட்டு முறை — வெட் பல்ப் குளோப் டெம்பரேச்சர் — 1950களில் அமெரிக்க இராணுவத்தால் உருவாக்கப்பட்டது.
1980களில், கடும் வெப்பம் ஒரே பருவத்திற்குள் இறுக்கமாக அடங்கியிருந்தது: உலகின் நிலப்பரப்பில் 93% பகுதியில், அந்த வழக்கமான பருவத்திற்குள்ளேயே கடும் உலர்-வெப்ப நாட்களில் 80%க்கும் மேற்பட்டவை நிகழ்ந்தன. ஆண்டு முழுவதும் வெப்பநிலை மாற்றம் குறைவாக இருக்கும் வெப்பமண்டலப் பகுதிகளில் கூட இந்த போக்கு காணப்பட்டது. உலர்-வெப்பப் பருவமும் ஈரப்பத-வெப்பப் பருவமும் பெரும்பாலும் ஏறத்தாழ ஒரு மாதம் இடைவெளியில் இருந்தன, குறிப்பாக வடமேற்கு மெக்சிகோ, மத்திய இந்தியா போன்ற பருவமழை பாதிக்கும் பகுதிகளில். அங்கு உலர்-வெப்பப் பருவம் ஈரப்பத-வெப்பப் பருவத்திற்கு முன்பே தொடங்குகிறது.
2015-2024ஆம் ஆண்டுகளில், அந்த இறுக்கம் தளர்ந்துவிட்டது: உலகின் பாதிக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் கடும் வெப்பம் ஆண்டு முழுவதும் பரவிக் காணப்படுகிறது — ஆனால் இது எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. மேற்கு ஐரோப்பா, தென் ஆப்பிரிக்கா, வடமேற்கு இந்தியா ஆகிய பகுதிகளில், வழக்கமான வெப்பப் பருவத்திற்கு முன்னதாக (வசந்த காலத்தை நோக்கி) அதிக கடும்-வெப்ப நிகழ்வுகள் நடைபெறுகின்றன. அமெரிக்கா, கிழக்கு சீனா, வட ஆப்பிரிக்கா, கிழக்கு ஐரோப்பா ஆகிய பெரும்பாலான பகுதிகளில் இந்த அதிகரிப்பு, வழக்கமான பருவத்திற்குப் பின்னதாக (இலையுதிர் காலத்தை நோக்கி) நிகழ்கிறது.
சொல் விளக்கம்
இதுவரை நடந்தது
- உலகின் மிக வறண்ட பாலைவனமான அட்டகாமாவில் அபூர்வமாக பனி பொழிந்தது ஏன்?
- எகிப்தின் கடலோர உப்பு நிலங்கள் விரிவடைகின்றன: காலநிலை மாற்றத்தின் சான்று
- பலவீனமான கடல் வெப்பநிலை வேறுபாடுகள் புயல்களை மேலும் பலப்படுத்தலாம்: ஆய்வு
- பூமியின் பழங்கால மிகுபனிக் காலத்தை உப்பு படிகங்கள் ஆழப்படுத்தியதா?
- ஆண்டார்டிகாவில் சாதனை பனிப் பெருக்கம்: 695 பில்லியன் டன் கூடுதல் ஏன்?
- புதிய S-DEIM முறை: குறைந்த தரவிலும் 40% துல்லியமான கடல் வெப்பநிலை கணிப்பு
- கோடையை தாண்டி பரவும் கடும் வெப்பம்: புதிய உலகளாவிய ஆய்வு
