உட்டா மலைகளில் மறைந்திருக்கும் பனிக்கட்டி ஒரு பில்லியன் டன் இருக்கலாம்: ஆய்வுகள்
உட்டா பல்கலைக்கழக புவியியலாளர்கள், டிம்பனோகோஸ் பாறை பனிப்பாறையில் மறைந்திருக்கும் பனிக்கட்டியை புதிய ஈர்ப்பு அடிப்படையிலான படமாக்கல் நுட்பத்தின் மூலம் வரைபடமாக்கியுள்ளனர். உட்டாவின் 836 அறியப்பட்ட பாறை பனிப்பாறைகள் மொத்தமாக சுமார் 1 கிகாடன் நீரைக்…
பாறைக் குவியல்களாகத் தோன்றி, கணக்கில் வராத பெரும் பனிக்கட்டி நிறையை மறைத்து வைத்திருக்கும் 'பாறை பனிப்பாறைகள்', உட்டாவின் வாசாட்ச், யுயின்டா மலைத்தொடர்களில் பொதுவானவை. மோவாபுக்கு அருகிலுள்ள கொலராடோ பீடபூமியில் உள்ள லா சால் மலைகளிலும் இவை காணப்படுகின்றன. சால்ட் லேக் சிட்டி மற்றும் புரோவோவுக்கு அருகில் மவுன்ட் டிம்பனோகோஸ் அடிவாரத்தில், உட்டாவின் மிகப்பெரிய பாறை பனிப்பாறைகளில் ஒன்றான டிம்பனோகோஸ் பாறை பனிப்பாறை உள்ளது. அதை உட்டா பல்கலைக்கழக புவியியலாளர்கள் இப்போது தெளிவாக ஆராய்ந்துள்ளனர். அது எப்படி உருவானது, அதில் எவ்வளவு பனிக்கட்டி உள்ளது என்பதை இரண்டு புதிய ஆய்வுகள் ஆவணப்படுத்துகின்றன.
டிம்பனோகோஸ் பாறை பனிப்பாறை, 600 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பப் போதுமான அளவு, அதாவது 1.5 மில்லியன் கன மீட்டர் (சுமார் 396 மில்லியன் காலன்) உறைந்த நீரை சேமித்து வைத்திருப்பதாக ஆய்வாளர்கள் கண்டறிந்தனர். இது எகிப்தில் உள்ள கிசாவின் மிகப்பெரிய பிரமிட்டின் அளவுக்குச் சமமானது. 'டிம்பனோகோஸ் பாறை பனிப்பாறை ஆச்சரியப்படும் அளவுக்கு பனிக்கட்டி நிறைந்தது. இதில் 83% பனிக்கட்டியும் 17% தளர்வான பாறையும் உள்ளது' என, ஆய்வுகளில் ஒன்றின் முதன்மை ஆசிரியர் ப்ரான்சன் ஸ்விஜனோவிச் தெரிவித்தார். 'உட்டா மலைகளில் நிறைய பனிக்கட்டி மறைந்துள்ளது' என பனிப்பாறையியல் பேராசிரியர் லீஃப் ஆண்டர்சன் தெரிவித்தார். நடப்பவர்கள் 120 அடி (37 மீட்டர்) மறைந்திருக்கும் பனிக்கட்டியின் மேல் அறியாமலேயே நின்றுகொண்டிருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதைக் கண்டறிய, ஸ்விஜனோவிச் 2024 இலையுதிர் காலத்தில் எமரால்டு ஏரிக்கு மேல் உள்ள பனிப்பாறைக்கு உணர்திறன் மிக்க ஈர்ப்புமானி ஒன்றை எடுத்துச் சென்றார். ஆறு களப்பயணங்களில் 25 மீட்டர் இடைவெளியில் 232 இடங்களில் ஈர்ப்பு அளவீடுகளை அவர் எடுத்தார். பாறைக்கும் பனிக்கட்டிக்கும் வெவ்வேறு அடர்த்தி இருப்பதால், ஈர்ப்பு விசையில் அதிக குறைவு அடர்த்தியான பனிக்கட்டி அடியில் இருப்பதைக் காட்டியது. சூரியன், சந்திரன், நிலப்பரப்பு, அட்சரேகை, உயரம் ஆகியவற்றுக்கான திருத்தங்களைச் செய்த பிறகு, குழு புதிய முறையை உருவாக்க மாதக்கணக்கான கணக்கீட்டு நேரத்தை செலவிட்டது. பேசியன் புள்ளியியலைப் பயன்படுத்தி மறைந்திருக்கும் பனிக்கட்டியை 3D-இல் இம்முறை படமாக்கியது.
உட்டாவின் பாறை பனிப்பாறைகள், 21,000 முதல் 18,000 ஆண்டுகளுக்கு முன் உச்சத்தை எட்டிய பனி யுகத்தின் எச்சங்கள் அல்ல. மாறாக, அந்த பனிப்பாறைகள் உருகிய பிறகு ஆயிரக்கணக்கான ஆண்டுகளில் உருவான நீர் சேமிப்புகள் இவை என இரண்டாவது ஆய்வு கண்டறிந்தது. பாறைச் சரிவுகள் பாறை பனிப்பாறைகளின் மேல் பகுதிகளில் நிலைத்திருக்கும் பனியை மூடுவதன் மூலம் அவை நிறை பெறுகின்றன என, ஆய்வாளர்கள் உருவாக்கிய புதிய கணிதமாதிரி தெரிவிக்கிறது.
செயற்கைக்கோள் படங்கள் மூலம் உட்டாவில் ஆவணப்படுத்தப்பட்ட 836 பாறை பனிப்பாறைகளில் டிம்பனோகோஸும் ஒன்று. ஒரு பாறை பனிப்பாறையின் பரப்பளவுக்கும் அதன் கீழுள்ள பனிக்கட்டி அளவுக்கும் இடையேயான தொடர்பைப் பயன்படுத்தி ஆய்வாளர்கள் ஒரு மதிப்பீட்டை வைத்தனர். உலகின் அறியப்பட்ட 50,000 பாறை பனிப்பாறைகள் ஒட்டுமொத்தமாக 48 கிகாடன் நீரைக் கொண்டிருக்கக்கூடும் என அவர்கள் மதிப்பிடுகின்றனர். ஒரு கிகாடன் என்பது 1 பில்லியன் மெட்ரிக் டன், அதாவது ஒரு கன கிலோமீட்டருக்குச் சமமானது, அல்லது 400,000 ஒலிம்பிக் நீச்சல் குளங்களை நிரப்பப் போதுமானது. உட்டாவின் சொந்த பாறை பனிப்பாறைகள் சுமார் 1 கிகாடன், அதாவது 815,000 ஏக்கர்-அடி (சுமார் 266 பில்லியன் காலன்) நீரைக் கொண்டிருக்கலாம் என மதிப்பிடப்படுகிறது.
சொல் விளக்கம்
இதுவரை நடந்தது
- ஆசியாவின் நீர்த் தொட்டி: ஆண்டுக்கு 24 பில்லியன் டன் நிலத்தடி நீர் இழப்பு
- இந்தோனேசியாவின் கடல்புல் தரத்தை வரைபடமாக்கும் புதிய ஆய்வு
- பிரிட்டனின் எரிந்த முல்லைப்புல்வெளிகள் வாரங்களில் பசுமையாகுமா?
- புயல் தீவிரமடையும் முன் தோன்றும் அறிகுறிகளை காட்டும் 30 ஆண்டு ராடார் தரவு
- திபெத் பீடபூமியில் 1,32,867 பாறை பனிப்பாறைகளை பட்டியலிட்ட சீன விஞ்ஞானிகள்
- காட்டுத் தீயிலிருந்து குடியிருப்புகளைக் காப்பது எப்படி? புதிய ஆய்வு வழிகாட்டல்
- உட்டா மலைகளில் மறைந்திருக்கும் பனிக்கட்டி ஒரு பில்லியன் டன் இருக்கலாம்: ஆய்வுகள்
